நிலச்சரிவில் ஒரு கார் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் தள்ளப்பட்டது. அதில் பயணித்த ஐந்து பேரும் இறந்துள்ளனர்.
கென்யாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிவருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஓரிடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் அந்தவழியாக சென்றுகொண்டிருந்த கார் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் தள்ளப்பட்டது. அதில் பயணித்த ஐந்து பேரும் இறந்துள்ளனர்.
மேலும் 55 பேர் நிலச்சரிவுகளில் பலியாகியுள்ளனர். இவர்களில் ஏழு குழந்தைகளும் அடங்குவர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
மேற்கு போகோட் ஆளுநர் ஜான் க்ரோப் அல் ஜெஸீரா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தபோது, "இதுபோன்ற பேரிடரை இதற்கு முன் நாங்கள் எதிர்கொண்டதே இல்லை" எனக் கூறியிருக்கிறார்.
மேற்கு போகோட்டில் உகாண்டா நாட்டு எல்லைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் இதனால் அப்பகுதியில் சாலைகள், பாலங்கள் அனைத்தும் சேதம் அடைந்து பேரழிவு ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் அலுலவகம் கூறுகிறது.ராணுவம் மற்றும் காவல்துறையினரும் களத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக அப்பகுதியில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு அவசர உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.